செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் 39 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட உப்பு உற்பத்தியின் முதலாவது அறுவடை

கிளிநொச்சியில் 39 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட உப்பு உற்பத்தியின் முதலாவது அறுவடை

1 minutes read

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவினரால் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் 39 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட உப்பு உற்பத்தியின் முதலாவது அறுவடை நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது.

குறித்த உப்பு உற்பத்தித் திட்டத்தின் ஊடாக சுமார் 100 மெற்றிக் தொன் உப்பை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உப்பு உற்பத்தியை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இளைஞர் குழுவினரால் பிரதேச அபிவிருத்திக் குழுவிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

பின்னர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து உப்பு உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும், தமது முயற்சியை கைவிடாமல் இளைஞர்கள் தொடர்ந்து முன்னெடுத்ததன் பயனாக, தற்போது முதலாவது உப்பு அறுவடையை மேற்கொள்ளும் நிலையை இத்திட்டம் எட்டியுள்ளது.

இத்திட்டமானது இளைஞர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது அறுவடை நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த. ஜெயசீலன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், AP SALTERS (PVT) LTD – SOLAR SALT, Pachchilapalli நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பல சவால்களுக்கு மத்தியில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சியின் முதலாவது அறுவடை, கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர்களின் தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் முக்கிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.