செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை கோரி கொழும்பில் போராட்டம்

மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை கோரி கொழும்பில் போராட்டம்

1 minutes read

மலையக தமிழ் மக்களுக்குச் சொந்தக் காணி உரிமையையும், கண்ணியமாக வாழ்வதற்கான வீடமைப்பு உரிமையையும் உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி தலைநகர் கொழும்பில் இன்று புதன்கிழமை  (11) விசேட கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமும் தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

‘பட்ஜெட்டில் வீடு கட்டுவதற்கு அதிக நிதியை ஒதுக்கு’, ‘பெருந்தோட்ட வீடமைப்புக்கான நிதியை உயர்த்து’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு, எதிர்வரும் வரவுசெலவுத் திட்டங்களில் தோட்டம் சார்ந்த வீடமைப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் வலியுறுத்தினர்.

‘200 வருட உழைப்பு: நமக்கு நமது நிலம் வேண்டும்! நில உரிமை மற்றும் வீட்டு உரிமை என்பது மனித உரிமை!’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், மலையக மக்களின் அடிப்படை மனித உரிமையான காணி உரிமையை உடனடியாக அரசாங்கம் வழங்க வேண்டுமெனக் கோரினர்.

வருடத்துக்கு 50 வீடுகள் கட்டுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், சொந்தமாக வீடு கட்டக்கூடிய வசதியுள்ள மலையக மக்களுக்கு உடனடியாகக் காணிகளை வழங்குவதோடு, குறைந்த வட்டியில் எளிதான தவணைக்கட்டண கடன் வசதிகளையும்  அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அன்டனி ஜேசுதாசன்,

‘மலையக மக்களுக்கான காணி உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். மலையகப் பகுதிகளிலுள்ள காணிகள் எந்த வகையிலும் குத்தகைக்கோ அல்லது விற்கப்படவோ கூடாது என்பதே எமது இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதில் நுவரெலியா, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மக்கள் பங்கேற்றுள்ளனர்.

மலையக மக்களுக்கு அரசாங்கம் அடுக்கடுக்காக வாக்குறுதிகளை வழங்கினாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு அமைச்சரவை தீர்மானம் கூட இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆகக் குறைந்தது கொள்கை ரீதியான தீர்மானங்கள் கூட எடுக்கப்படவில்லை. எனவே இனியும் அந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காது மலையக மக்களுக்கு 20 பேர்ச் காணியை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையிலும், இன்னமும் பாடசாலைகளிலும், கூடாரங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் விரைவில் மீளக் குடியேற்றி அவர்களின் காணி மற்றும் வீட்டுரிமையையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி.முத்துலிங்கம் உள்ளிட்ட குழுவினரை பொலிஸார் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து மகஜரொன்றையும் கையளித்திருந்தனர். இதன் போது எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தருவதாக  ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்ததாக பி.முத்துலிங்கம் தெரிவித்தார்.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.