Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது

3 minutes read

உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம்.தமிழகத்தில் கூடுதல்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது.

இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

அதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்:

* தனியாக செயல்படுகின்ற காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதி.

* காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.

* மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை கொத்தவால் சாவடியில் கடைகள் முன்பு பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தும் பணி நடந்தது

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்ய அனுமதி.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

*. தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு மற்றும் அலுவலக பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி.

* மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் செயல்பட அனுமதி.

* மின் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி

*. இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் இயக்க அனுமதி.

* ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி.

* புத்தக கடைகள் செயல்பட அனுமதி.

* வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

* டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிக்கு அவசர காரணங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவசர காரணங்களுக்காக மட்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் இ- பதிவு பெற்று பயணிக்கலாம்.

உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம். மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியொருவர் செல்ல வேண்டும் என்றால், மருத்துவ அவசர காரியங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு மட்டும் இ-பதிவுடன் செல்லலாம். மாவட்டத்திற்கு உள்ளே மருத்துவ அவசர காரியங்கள், இறுதிச் சடங்குகளுக்கு இ-பதிவு இல்லாமல் செல்லலாம்.

விமானம், ரெயில் மூலம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக https://eregister.tnega.org மூலம் இ-பதிவு செய்து பயணிக்கும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

அத்தியாவசிய சேவைகளை அளிக்கும் தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய், காவல், தீயணைப்பு, சிறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், அரசு அச்சகம், உணவு, கூட்டுறவு, உள்ளாட்சி மன்றங்கள், வனம், கருவூலம், சமூகநலத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, இயற்கை பேரிடர் ஆகிய துறைகளின் அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் இயங்கும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம். ஏ.டி.எம். மற்றும் அதுதொடர்பான வங்கி சேவைகளுக்கு அனுமதி உண்டு.

ரத்த வங்கிகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு அனுமதி உண்டு. அவசர பயணங்களுக்காக விசா வழங்கும் நிறுவனங்கள், குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கலாம். அவர்கள் அலுவலகத்திற்கு வரும்போது தங்களின் நிறுவன அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More