ஆப்கானில் அப்படியே விட்டுவிட்டு வந்த அமெரிக்க விமான றெக்கையில் தூளி கட்டி ஊஞ்சலாடும் தலிபான்கள்!!

பீஜிங்:ஆப்கானில் அமெரிக்க படைகள் விட்டுவிட்டு வந்த விமான றெக்கையில், தலிபான்கள் தூளி கட்டி ஊஞ்சலாடும் வீடியோவை சீன அதிகாரி வெளியிட்டு கிண்டல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தனது படைகளை திரும்ப அழைத்து சென்றது. ஆக. 14ம் தேதி கிட்டத்தட்ட ஆறாயிரக்கணக்கான வீரர்களையும், 1.5 லட்சம் மக்களையும் அழைத்து சென்றது.

அமெரிக்கா செல்லும் முன், அவர்கள் பயன்படுத்திய ராணுவ உடைகள், ஹெலிகாப்டர், போர் விமானங்கள், ஜீப்கள் உள்ளிட்டவற்றை அப்படியே விட்டுவிட்டு சென்றனர். குறிப்பாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர் விமானங்கள், ஹெலிகாப்டர் போன்றவை தலிபான்களின் கைகளில் சிக்கியதால், உலக நாடுகள் கவலையுற்றன.

ஆனால், அமெரிக்கா தரப்பில் விட்டுவிட்டு வந்த தளவாடங்கள் மறு பயன்பாட்டுக்கு உதவாது. அதனை தலிபான்களால் இயக்க முடியாது என்று தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்கள் புதிய அரசில் இடம்பெறும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டனர். அனைவரும் தலிபான்களாக இருந்தும், புதிய அரசு அமைக்கவுள்ள தலிபான்களின் செயலை சீனா வரவேற்றது.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் டாலர் உதவி அறிவித்தது. இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென் பின் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க வேண்டும். ஆப்கானின் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்’ என்றார்.

இதற்கிடையே, சீனாவின் வெளியுறவு அமைச்சக அதிகாரி லிசின் எஜாவோ தனது டுவிட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்க படைகளால் காபூலில் விட்டுவிட்டு வந்த சேதமடைந்த போர் விமானங்களின் ெறக்கையில் தூளி கயிறு கட்டி, அந்த கயிற்றில் ஊஞ்சல் ஆட்டம் ஆடி விளையாடிக் கொண்டுள்ளனர்.

மேலும், அவர் வெளியிட்ட பதிவில், ‘இது அமெரிக்க ஆட்சியாளர்களின் கல்லறை; அவர்களின் போர் விமானங்கள், தலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. அவர்கள் அதனை தொட்டில்களாகவும், விளையாட்டு பொம்மைகளாகவும் மாற்றியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆசிரியர்