6~
வேண்டிய எண் விழ நேர்பவள்
தாயக்குட்டானில் ஓதுவதை விட
வலிமை மிக்கதாய்
என்ன மந்திரங்கள் இருந்து விடக்கூடும்?
5~
தொலைந்துபோன சிவப்புக் காய்க்கு பதிலாக கல் ஒன்று நகர்கிறது.
எந்த எண் விழுந்தால்
ஆட்டத்தில் இருந்தே தொலையலாம்?
4~
இருபது வருடங்களின் பின் தாயம் உருட்டுகிறேன்.
ஒவ்வொரு கட்டங்களாய் பின்னோக்கி நகர்கிறது எனது மஞ்சள்க் காய்கள்.
3~
முத்தாயம் விழுந்தால்
நகர்த்தாமல் நிறுத்தி வைக்கலாமாம்.
எனக்கும் முத்தாயம் விழுந்திருக்கலாம்~
ஆறு வயதுக்குள்.
2~
அந்த அண்ணா பாவம் என்று சொல்லி
வெட்டாமல் கடக்கும் தங்கையை
அக்கா என்பதா? அம்மா என்பதா?
1~
தாயம் விழ வேண்டிக் கொள்கிறாள்.
அடுத்த ஆட்டத்திலாவது
சேர்த்துக் கொள்ளென்று
அடம்பிடிக்கிறான் கடவுள்.
கமல் ஆபரன்