கார்த்திகைப் பூவெனக் காந்தளும் மலர்ந்தது!
கண்களின் ஓராமாய் நீருமே கசிந்தது!
ஆர்த்தோர் அலையெனத் துயருமே எழுந்தது!
அகமதில் ஆயிரம் நினைவுமே விரிந்தது!
மூர்க்கமாய் வருபகை முறித்திட என்றுமே
முனைந்தவர் களமதில் வீரமே நிமிர்ந்தது!
போர்த்திறம் ஆடியே கண்களை மூடினோர்…
பொன்சிரிப் பொலியுமே காதிலே விழுந்தது!
ஆயிரம் களமுனை கண்டவர்…! வென்றவர்…!
ஆயிரம் ஆயிரம் விழுப்புண் சுமந்தவர்!
பாயிரம் காவியம் நாமெனப் பறந்தவர்!
‘பலியதே தாம்’… எனப் பரிசுகள் ஈந்தவர்!
தேய்ந்திடு தாய்நிலம் தேறவே தம்முடல்
தேவையே என்று தாம் நினைந்துமே சென்றவர்!
ஓய்ந்திடா உளத்தொடும் அவரையே போற்றினோம்!
ஒன்றிடும் மனத்தொடும் தீபமே ஏற்றினோம்!
காலையில் எழுந்திடும் போதில்… உம் கடிதமே
‘களமதில் நிற்கவே’ என்றுதான் உரைத்தது!
மாலையில் ஓரிடி கேட்டிடும் போதிலும்
‘மண்ணதில் வீழ்ந்தனம்’ என்றதும் உரைத்தது!
சாலையில் எங்குமே உங்களின் திருவுடல்
சாமியாய் ஊர்வலம்… சாற்றினோம் அஞ்சலி!
பாலையில் ஓர் மழை ஆகியே பெய்த நீர்…
பாசமாய் எங்களின் கண்களின் நீர்த்துளி!
மனமதில் பூசலார் கட்டிய கோயிலாய்…
மகிழ்வொடு நாமுமே கல்லறை கட்டினோம்!
தினமுமே திரிகொளு நெய்விளக் கேற்றியே…
தீபமாய் உங்களின் முகவொளி காண்கிறோம்!
நனையுமெம் விழியினீர் படையலில் தூவினோம்…
நன்கு நீர் ஏற்கவே நாமுமே வேண்டினோம்!
பனையினைப் போலவே பலதுமே தந்தவும்
பதமலர் பணிந்துமே… பாவினை இசைக்கிறோம்!
பள்ளியின் வகுப்பறை… பக்கத்துக் கதிரைகள்
பரவியே உம்முகம் பளிச்சிடு கின்றதே!
அள்ளி நாம் அணைக்கிறோம்… அன்ப…! வா…. என்கிறோம்…!
ஆசையாய் நிலமதைக் கொஞ்சியே நிற்கிறோம்!
சுள்ளிகள் கொண்டுமே அடுப்பினை மூட்டவா
சுடரென விடுதலைத் தீயினை ஏந்தினீர்?
கள்ளியின் மேலுமோர் காந்தளே பூத்திடக்
கார்த்திகை ஆகினீர்…! கண்ணினீர் ஆகினீர்!
செ. சுதர்சன்