மாவீரரே…..!
மண்ணில் யுகங்கள் தோறும் நிரந்தர மனிதர் நீவிர்
இதயங்களில் வாழ்வீர்
இன்னுயிர் நீத்தீர்
இனிய குடும்பம் தொலைத்தீர்
இனம் , மொழி காக்க வாழ்ந்தீர்
விடுதலைக்காக உதிரம் சிந்தினீர்
வாழ்வை விளைவிக்கும் விதைகளாயின
உமது போராடும் வார்த்தைகள்
காலத்தின் சுழற்சியை குரலால் கட்டினீர்
ஊழித் தாண்டவச் சொற்களால் திடுக்கிட்டு நடுங்கியது உலகம்
நந்திக் கடலில் அலைகளுக்கு ஊடே
நிற்கிறீர் பேரலையாய்
துரோகிகளும் எதிரிகளும் உறைந்து இறுகித் தத்தளிக்கிறார்கள்
திசைகளை விழிகளால் துளைத்தவரே…!
கனவுகளில் மிருகங்கள் பயமுறுத்த
நனவுகளில் பறவைகள் மிரண்டு பறக்க
உடைந்த கண்ணாடிகளாய்
சிதறிய தமிழீழத்தினை மீடேற்ற
எங்கும் காற்றாய் … எதிர்ப்பின் உருவாய்
உயிர்த்திருப்பவரே…!
ஈழ மண்ணிற்காய்…
தமிழ் இனத்திற்காய்..
தாய் மொழிக்காய்..
மார்பினில் தோட்டாக்களை தாங்கியவரே..!
குருதி நனைந்து வறண்ட மண்ணிலும் நீராய்..
துயரம் மண்டிய கருக்கிருட்டிலும் பேரொளியாய்..
மாபெரும் ஒடுக்குமுறைகளுக்கு முன் எழுந்த அறமாய்..
அநீதியின் சூழ்ச்சிகளை வேரறுக்க கொந்தளிக்கும் சூறக்காற்றாய்…
இனி __
எங்களது மனதில் சூரியனாய்
என்றென்றும் கனன்று கொண்டிருப்பீர்கள்.
வசந்த தீபன்