அமெரிக்க குடியேற்றச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை அறிவித்தார்.
சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள 50 லட்சம் பணியாளர்கள் இதன் மூலம் உடனடியாகப் பயனடைவர் என்று கூறப்படுகிறது. இந்தச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மசோதா மூலம் கொண்டு வராமல், அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் இந்திய தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஏராளமானோர் பயனடைவர் என்று கூறப்படுகிறது. சட்ட விரோதமாக சுமார் 45 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பதாகத் தெரிகிறது.
தற்போது “எச்-1பி’ விசா பெற விரும்புவோர், “கிரீன்கார்டு’ எனும் கடினமான சட்டபூர்வ நிரந்தர குடியேற்ற உரிமையைப் பெற வேண்டியுள்ளது. அது இப்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 1.10 கோடி பேர் சட்ட விரோதமாக அந்நாட்டில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவது மிகக் கடினமான செயல் என்று கூறினார் ஒபாமா. மேலும், அவ்வாறு செய்வது “அமெரிக்க குணத்துக்கு’ மாறானது என்றும் தெரிவித்தார்.