உலகின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது என்று அதிபர் பராக் ஒபாமா கூறினார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, அமெரிக்கா திரும்பிய ராணுவ வீரர்களிடையே ஞாயிற்றுக்கிழமை பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: ஆப்கானிஸ்தானைப் பாதுகாப்பான இடமாக மாற்றி, அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் அங்கு நடக்காமல் தடுப்போம்.
அமெரிக்காவைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட ஏதேனும் பிரச்னையில் சிக்கிக் கொள்ளும்போது, நமது உதவியை நாடுகிறார்கள். அவர்கள் அவ்வாறு உதவி கோரும்போது, அமெரிக்கா உங்களது பணியை நாடுகிறது. வீரர்களாகிய நீங்கள் செய்யும் பணியை வேறு யாராலும் செய்ய முடியாது.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது. ஆனால் நாம் துவண்டு விடாமல் அவற்றை எதிர்கொண்டு வருகிறோம்.
சிரியாவில் நமது விமானத் தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர், அல்-காய்தா நம்மிடம் என்ன பாடம் கற்றதோ, அதை இப்போது ஐ.எஸ். கற்று வருகிறது.
அமெரிக்காவை மிரட்டிவிட்டு, யாரும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது.
இராக்கில் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் முடிவுக்கு வர நீண்ட நாட்களாகும். ஆனால் காட்டுமிராண்டித்தனமான ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை அழிப்போம் என்றார்.