இங்கிலாந்தின் வடக்கு லிங்கன்ஷைய்ர் பகுதியை சேர்ந்த முன்னாள் லாரி டிரைவரான டேவிட் லாங் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு பரிசுச் சீட்டை வாங்கியிருந்தார்.
குலுக்கல் நடந்து முடிவுகள் வெளியானபோது அவற்றை ஒழுங்காக சரிபார்க்க தவறிய டேவிட் லாங், அவர் வாங்கிய சீட்டுக்கு வெறும் 2 டாலர் 70 பென்னிகள் மட்டுமே பரிசு கிடைத்ததாக எண்ணி அதை கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு தனது வழக்கமான வேலையை பார்க்க தொடங்கினார்.
பின்னர், குப்பை தொட்டியில் தூக்கி வீசிய தனது பரிசு சீட்டுக்கு 10 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 9.8 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்ததை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த சீட்டினை தேடி கண்டுபிடித்து பரிசுத் தொகையை பெற்று கொண்டார்.
கோடிஸ்வராகி விட்ட டேவிட்டுக்கு பரிசு தொகையுடன் சேர்ந்து கேத்தலின் என்பவர் புது மனைவியாக வந்து வாய்த்தார். லாரி ஓட்டும் தொழிலுக்கு விடை கொடுத்து விட்டு கேத்தலினுடன் வாழ்ந்துவந்த டேவிட், லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்துக்கு மட்டும் விடை கொடுக்க மறுத்து விட்டார்.
என்றாவது ஒருநாள், மீண்டும் அதிர்ஷ்டம் வந்து தன் வீட்டு வாசற்கதவை தட்டும் என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். நம்பிக்கை தானே வாழ்க்கை?
டேவிட் வாழ்க்கையிலும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை அவரை மேலும் பல படிகள் உயரத்துக்கு தூக்கிச் சென்றது. கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற அதிர்ஷ்ட குலுக்கலில் அவர் வாங்கிய பரிசு சீட்டுக்கு 10 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 9.8 கோடி ரூபாய்) பரிசு கிடைத்துள்ளது.
இவ்வளவு பெரிய பரிசு தொகை ஒருமுறை கிடைத்தாலே சிலர் ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போவதுண்டு, ஆனால், இரண்டாவது முறையாகவும் லாட்டரியில் பரிசு வென்ற டேவிட்-கேத்தலின் லாங் தம்பதியர் ‘இது நாங்கள் எதிர்பார்த்ததுதான்’ என்று கூலாக கூறுகின்றனர்.
இந்த பரிசு தொகைக்கான காசோலையை இன்று அந்த தம்பதியர் பெற்றுக் கொண்டனர்.