வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தன்குளம் காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், மல்லாகத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான அச்சுதநாயகர் ஜெயந்தகுமார் (வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த நபர் வவுனியா கந்தன்குளத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரே வந்து தங்கியிருந்து அங்குள்ள காணியைத் தனிமையில் இருந்து பராமரித்து வந்துள்ளார்.
குடும்பத்தினர் குறித்த நபரை கடந்த 14 ஆம் திகதியிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியாததால் அவரது மனைவி நேரில் வந்து எங்கு தேடியும் கணவன் இல்லாமையால் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று கணவனைக் காணவில்லை என முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.
முறைப்பாட்டுக்கமைய கந்தன்குளம் பகுதியில் பொலிஸார் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த நபர் காட்டுப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சடலமாகக் காணப்பட்டார்.
இது கொலையா அல்லது வேட்டைக்குச் சென்ற போது ஏதாவது நடந்திருக்குமா போன்ற கோணங்களில் பூர்வாங்க விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.