ஆப்பிள் நிறுவனத்திலால் தயாரிக்கப்படும் ஐ போன் என்ற கைத் தொலை பேசி இன்று உலகம் முழுவதும் இளையவர்கள் முதல் முதியவர் வரை கவர்ந்து இழுக்கும் ஒரு பொருளாக மாறி இருக்கின்றது. கிட்டத் தட்ட இதுவோர் போதைத் பொருளுக்கு அடிமை போல் அனைவரையும் அதில் மயக்கி வைத்திருக்கிறது. உலகில் 900 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஐபோன் வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்து இதன் விற்பனையின் வேகத்தை அறிய முடிகின்றது இதன் லாபத்தையும் தெரிய முடிகின்றது.
வருடா வருடம் தமது வியாபாரத்தை இலாப நோக்கத்தோடு ஈட்டுவதற்காக புதிய புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இது வருடா வருடம் ஒரு தொடர் கதை போலவே வெளி வந்து கொண்டிருக்கின்றது. (Materialisme and Globalizatiom) இந்த உலகமயமாக்கல் பொருள்முதல்வாதம் உலகினிலே, ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக வெளி வருகிறது.
ஏகாதிபத்தியத்தின் சுரண்டலில் ஒன்றாக ஆப்பிள் என்ற இராட்சத நிறுவனம் உலகம் முழுக்க தனது விற்பனை மூலம் சுரண்டி வருகின்றது. வளர்முக நாடுகளில் ஏழைத் தொழிலார்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு குறைந்த கூலிகளை வழங்கி தான் மட்டும் பலத்த லாபத்தை ஈட்டிக்கொள்கிறது. வளரும் நாடுகளின் குறைந்த கூலி தொழிலாளர்கள் கொண்டு தொழிலாளர்கள் கூலியை குறைந்த நிலையில் வைத்து, சுரண்டல் மூலம் மிக அதிக லாபத்தினை ஈட்டுவது தான் ஏகாதிபத்திய கொள்கையின் நோக்கமாகும்.
தனியார் வசம் இவ்வளவு பணம் போய் சேருவது இந்த உலகின் சமத்துவமின்மையை ( inequality) மெலும் அதிகரிக்கிறது. பெரும் தொற்று, யுத்தம், பண வீக்கம், இயற்கை அழிவு இப்படி பல பிரச்சினைகளை உலகம் எதிர் கொண்டிருக்கும் வேளையிலே இது கூட ஒரு பெரும் தாக்கத்தை உலகில் ஏற்படுத்தி விடுகின்றது. ஏழை நாடுகளை இது மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கி அந்த மக்கள் பெரும் துயரை எதிர் கொள்ளுகின்றனர். ஆப்பிள் நிறுவனம் மாத்திரம் இன்றி இது போல் மேலும் பல தனியார் நிறுவனங்கள் இதே போலவே பெரும் தொகைப் பணத்தை சுரண்டி வருகின்றது. பெரும் முதலீடுகள் மூலமும் பங்குச் சந்தைகள் மூலமும் பெருவாரி லாபத்தை ஈட்டி வருகின்றன. உலகத்தில் ஒரு சில பெரும் முதலாளித்துவ நாடுகளும் ஒரு சில தனி மனிதர்களிடமே பெரும் தொகைப் பணம் சென்றடைகிறது. பெரும்பான்மை நாடுகள் வறிய கோட்டுக்குள்ளேயே இன்னும் இருக்கின்றது. ஒரு உலக சமத்துவமான பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் தடையாக இருக்கின்றது.
ஏகாதிபத்திய பொருளாதர சுரண்டலானது மேலும் மேலும் இந்த உலகை சமத்துவமின்மைக்கு தள்ளி விடுகின்றது. காலனித்துவ சுரண்டலை அடுத்து இந்த நவீன முதலாளித்துவ சுரண்டல் இல்லாது போகும் போது தான் வளர்முகநாடுகளின் வளர்ச்சியும் உலக சமத்துவமும் ஏற்படும். சமத்துவமான உலகம் இல்லை எனில் இங்கு ஓர் அநியாயமும் ஆக்கிரமிப்பும் சுரண்டலும் சமத்துவமின்மையுமாக மனித வாழ்வின் அந்நியப்படுத்தல் (Alienation to Exploitation ) அடைவதும் தான் மிஞ்சி இருக்கும் என கார்ல் மார்க்ஸ் சொல்லியிருப்பது முக்கியமாகின்றது.
பா.உதயன்
பொறுப்புத் துறப்பு | மேற்குறித்த படைப்பின் அனைத்துக் கருத்துக்களும் இதனை எழுதிய படைப்பாளியையே சாரும். வணக்கம் இலண்டன் இப் படைப்பு மற்றும் அதன் உள்ளடக்கங்களுக்கு பொறுப்பேற்காது.