முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளத்தில், பயன்பாட்டாளர்களின் தனியுரிமை மீறப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் “ஃபேஸ்புக்’ நிறுவனத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சி.என்.ஐ.எல். தனியுரிமைக் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் இஸபெல்லா ஃபால்க்-பைரோடின் வியாழக்கிழமை கூறியதாவது:
“ஃபேஸ்புக்’ வலைதளத்தில் தனியுரிமை மீறப்படுவது குறித்து பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தகவல் காப்புத் துறை அதிகாரிகள் கூட்டாக விசாரிக்க உள்ளனர். “ஃபேஸ்புக்’ வலைதளம் தவிர, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான “இன்ஸ்டாகிராம்’, “வாட்ஸப்’ ஆகிய சேவைகளிடையே தனிநபர்களின் தனிப்பட்ட விவரங்களை நிறுவனம் எவ்வாறு பகிர்ந்து கொள்கிறது என்பது குறித்தும் இந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர் என்றார் அவர்.
தனியுரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகளை “ஃபேஸ்புக்’ நிறுவனம் பல ஆண்டுகளாக சமாளித்து வந்தது.
இந்த நிலையில், தங்களது இணையதள நடவடிக்கைகளையும், ரகசியத் தகவல்களையும் “ஃபேஸ்புக்’ கண்காணிப்பதாக 25,000-க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய யூனியன் சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
அதையடுத்து, இதுகுறித்து கூட்டு விசாரணை நடத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.