யேமனில் அமைதி திரும்ப ஐ.நா.விடம் 4 அம்சத் திட்டத்தை ஈரான் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
யேமனில் தற்போதைய நிலைமை மிக மோசமாக உள்ளது. ராணுவ நடவடிக்கை மூலமான தலையீட்டினால் மருத்துவமனைகள், பள்ளிகள், உணவுப் பொருள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியமான உள்கட்டமைப்புகள் அழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் இது அதிகரித்துக் கொண்டே போகிறது. பேரழிவை நோக்கி யேமன் நீங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டின் மீது கண்மூடித்தனமாக நடத்தப்படும் வான்வழித் தாக்குதலை நிறுத்த சர்வதேச முயற்சி அவசியமாகிறது. போர் நிறுத்த முயற்சியில் உலக நாடுகள் கூடுதல் தீவிரம் காட்ட வேண்டும். அங்கு வெளிநாடுகள் நிகழ்த்தி வரும் அனைத்துத் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
சண்டையினால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அந்த நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அங்கு அமைதி திரும்புவதற்கும், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கும் ஒரே வழிதான் உள்ளது. அந்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் பிரிவினரும் பங்கேற்கும் தேசிய அரசு உருவாக வேண்டும்.
இதில் எந்த வெளிநாட்டின் தலையீடும் இருக்கக் கூடாது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பான் கி-மூனுடன் ஈரான் அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ரூ. 1,700 கோடி நிதி உதவி அளிப்பதாக சவூதி அறிவிப்பு
யேமனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ 253 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 1,700 கோடி) நிதி உதவி அளிப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
யேமனில் அரசுப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்து வரும் போரினால் அந்த நாட்டில் பாதிக்கப்பட் லட்சக் கணக்கானோருக்கு உதவ உடனடியாக 253 மில்லியன் யூரோ தேவைப்படுகிறது என என ஐ.நா. வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து அந்தத் தொகையை சவூதி அளிக்கும் என அந்த நாட்டு மன்னர் சல்மான் தெரிவித்ததாக, சவூதி அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மன்னரின் சார்பில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இந்த இக்கட்டான வேளையில், யேமன் சகோதரர்கள் சந்தித்து வரும் இன்னல்களைப் போக்கி, அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்’ என மன்னர் தெரிவித்ததாக, அரசு செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ. செய்தி வெளியிட்டிருக்கிறது.
யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி தலைமையிலான 10 நாடுகளின் கூட்டுப் படை கடந்த 3 வாரங்களாக வான்வழித் தாக்குதலும், போர் கப்பல்களிலிருந்து குண்டு வீச்சும் நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், ஐ.நா. வேண்டுகோளை ஏற்று, யேமனுக்கு நிதி உதவி அளிப்பதற்கு சவூதி முன்வந்திருப்பது குறிப்பிடத் தக்கது. யேமன் அதிபர் ஹாதி சவூதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.