ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 700 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் இத்தாலி, மால்டா நாடுகளின் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இத்தாலி நாட்டு கடற்படை வெளியிட்ட அறிக்கையில், “லிபியாவின் வடக்கு கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு சனிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகில் இருந்தவர்கள், அவ்வழியே சென்ற போர்ச்சுகல் நாட்டு கப்பலில் இருந்தவர்களிடம் உதவி கோருவதற்காக, படகின் ஒரே பகுதியில் திரண்டதால் அது கவிழ்ந்துள்ளது. இதுவரை 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், படகு விபத்துக்குள்ளான கடல்பகுதி அருகே அமைந்துள்ள மால்டா நாட்டு பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவிக்கையில், “50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்’ என்றார்.
ஐ.நா. சபையின் அகதிகளுக்கான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கர்லோட்டா சமி இத்தாலி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள், அந்தப் படகில் 700க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாக தெரிவித்தனர்’ என்றார்.
இத்தாலியின் லாம்ப்துசா தீவில் இருந்து 193 கிலோ மீட்டர் தொலைவிலும், லிபியாவின் கடற்பகுதியில் இருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலும் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்தப் படகில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தெரியவில்லை. ஐரோப்பாவில் குடியேறும் எண்ணத்துடன் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்த படகில் சட்ட விரோதமாக வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இதே பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 2 படகுகள் விபத்துக்குள்ளானதில், 450 பேர் பலியாகினர். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா, இத்தாலி இடையிலான கடற்பகுதியில் நிகழ்ந்த படகு விபத்துகளில் 1,500 அகதிகள் பலியாகியுள்ளனர்.