இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி அமெரிக்க அரசின் தலைமை மருத்துவராக முறைப்படி புதன்கிழமை பதவியேற்றார்.
அவருக்கு அந்த நாட்டின் துணை அதிபர் ஜோ பிடன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமெரிக்க சட்டப்படி, தலைமை மருத்துவர் பதவியென்பது, கடற்படையின் துணைத் தலைமைத் தளபதிக்கு இணையானதாகும்.
விர்ஜினியா மாகாணம், ஃபோர்ட் மையர் ராணுவ முகாமில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் ஸில்வியா பர்வெல், முன்னாள் தலைமை மருத்துவர் டேவிட் ஸாட்சர், விவேக் மூர்த்தியின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பகவத் கீதை மீது விவேக் மூர்த்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவர் அந்த நாட்டின் 19-ஆவது தலைமை மருத்துவராக இருப்பார்.
இந்திய வம்சாவளியினரான டாக்டர் விவேக் மூர்த்தி (37) பிரிட்டனில் பிறந்து, அமெரிக்காவின் ஹார்வர்டு, யேல் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்.
இவரது தந்தை வழிப் பாட்டனார் ஒரு விவசாயி. தந்தை இந்தியாவில் கல்வி கற்று, வேலை நிமித்தமாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார்.
விவேக் மூர்த்தியை அமெரிக்காவின் அரசுத் தலைமை மருத்துவராக அதிபர் ஒபாமா 2013-ஆம் ஆண்டு நவம்பரில் நியமித்தார். ஆயினும், அந்த நியமனத்தை அமெரிக்க நாடாளுமன்றம் உறுதி செய்யாமல் கால தாமதம் செய்து வந்தது.