தானம் தரும் ரத்த வகையை, எல்லோருக்கும் ஒத்துவரும் ரத்த வகையாக மாற்ற உதவும் நொதியை, கனடாவை சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, துணை பேராசியரியர் ஜெயச்சந்திரன் இடம் பெற்றுள்ளார். இக்குழு கண்டுபிடித்துள்ள நொதி, ரத்த வகை ‘ஏ’, ‘பி’, போன்றவற்றில் உள்ள ‘ஆன்டிஜன்’ எனப்படும் சர்க்கரையை நீக்கி விடுகிறது. இதனால், இவ்வகை ரத்தம், ‘ஓ’ வகை ரத்தத்திற்கு நிகராக மாறுகிறது. ‘ஓ’ வகை ரத்தம், எல்லோருக்கும் ஒத்துவரும் ரத்த வகையாக கருதப்படுகிறது. ஒவ்வாமை போன்ற பிரச்னைகளை உருவாக்காது என்பதால், அரிய ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கும், இந்த ஆன்டிஜன் நீக்கப்பட்ட ரத்தம் பொருந்தும். இதனால், குறிப்பிட்ட பிரிவு ரத்தம் கிடைக்காமல், நோயாளிகள் அவதிப்படும் நிலை அல்லது உயிரிழப்பு தவிர்க்கப்படும். ரத்த வகையை மாற்றும் போது, ஒரு சதவீதம் ஆன்டிஜன் இருந்தால் கூட, அது ஒவ்வாமையை உண்டாக்கி, பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, ஆன்டிஜனை அறவே நீக்குவதற்காக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நொதியின் வலிமையை, மேலும் அதிகரிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
1