குழந்தைகளைத் தாக்கும் ஒருவகைக் கண் புற்றுநோயை நவீன செல்லிடப்பேசிகளான “ஸ்மார்ட்போன்’கள் மூலம் கண்டறிய முடியும் என பிரிட்டன் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் “குழந்தைகள் கண் புற்றுநோய் அறக்கட்டளை’ (சி.ஹெச்.இ.சி.டி.) என்ற அமைப்பின் நிபுணர்கள் கூறியதாவது:
ஸ்மார்ட் போன்களின் கேமராவிலிருந்து பாயும் வெளிச்சத்தின் மூலம் “ரெட்டினோபிளாஸ்டோமா’ என்ற கண் புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை மட்டுமே இந்த வகைப் புற்றுநோய் தாக்கும்.
கண் பார்வையை முழுமையாகப் பறிப்பது மட்டுமின்றி, நாளடைவில் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
எனினும், குழந்தையின் கண்ணுக்குள் இந்தப் புற்று நோய்க் கட்டி வளர்ந்திருப்பது,ஸ்மார்ட் போன்களின் கேமராக்கள் வெளியிடும் “ஃபிளாஷ்’ வெளிச்சத்தின் மூலம் தெரியும் என்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறையின் மூலம் பிரிட்டனில் நான்கு மாதக் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆர்வென் என்ற அந்தக் குழந்தையை ஸ்மார்ட் போன் மூலம் புகைப்படம் எடுத்தபோது, அதன் கண் வெள்ளையாக இருப்பதை அவளது தாய் கவனித்துள்ளார்.
அதையடுத்து, இதுகுறித்து மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது அந்தக் குழந்தையை “ரெட்டினோபிளாஸ்டோமா’ கண் புற்றுநோய் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட கண் அகற்றப்பட்டு, குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது என சி.ஹெச்.இ.சி.டி. கூறியது.
3