அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனைக் குழுவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் அறிவித்தார்.
தற்போது லூயிஸியானா மாகாணத்தின் ஆளுநராக உள்ள பாபி ஜிண்டால், 2016-ஆம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடக் கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னர், அக்கட்சி சார்பில் அவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, வேட்பாளர் தேர்வில் கலந்து கொள்வதாக அவர் இன்னும் நேரடியாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், வேட்பாளராக அறிவிப்பது குறித்து ஆலோசனைக் குழுவை அமைப்பதாக அவர் அறிவித்தார். இது தொடர்பாக வலைதளத்தை தொடங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது:
சுதந்திரமும் ஏராளமான வாய்ப்புகளும் உள்ள நாடு அமெரிக்கா என்ற நம்பிக்கையுடன் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எனது பெற்றோர் இங்கு வந்தனர். அவர்களுடைய நம்பிக்கை பொய்க்கவில்லை. இப்போது நமக்குள்ள உரிமைகள் எதையும் அடுத்த தலைமுறையினர் இழக்காமலிருக்க நாம் பாடுபட வேண்டும். இதில் என்னுடன் இணையத் தயாரா என்று அந்த வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், முற்றிலும் புதிய பாதையில் செல்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதைக் குறிப்பதாக எனது பிரசாரம் இருக்கும்.
குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ள மற்றவர்கள் மாற்றத்தைக் குறித்துப் பேச்சு மட்டுமே நடத்தி வரும் நேரத்தில், ஒபாமாவின் சுகாதாரத் திட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள் என்னவென்பதை விரிவாகப் பதிவு செய்துள்ளேன். நாட்டின் பாதுகாப்புத் துறையை சீரமைத்தல், எரிசக்தித் துறையில் தன்னிறைவு, கல்வித் திட்டத்தில் சீரமைப்பு குறித்தும் விரிவான திட்டங்களை வெளியிட்டுள்ளேன்’ என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதிலிருந்தும் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர், அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் கலந்து கொள்வது குறித்த இறுதி முடிவை ஜூன் மாதம் அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
43 வயதான பாபி ஜிண்டால் என்கிற பியூஷ் ஜிண்டால், 2004-ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லூயிஸியானா மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டு 2007-இல் வென்றார். அந்த நாட்டில் ஆளுநர் பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளியினர் இவர்தான். 2011-ஆம் ஆண்டில் மீண்டும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரர் ஜெப் புஷ் உள்பட பலர் ஆர்வம் தெரிவித்திருக்கின்றனர்.
1