“மேகடேமியா’ என்ற கடலை உணவு பரிமாறப்பட்ட விதம் பிடிக்காததால் கடும் கோபத்துடன் அத்துமீறி நடந்து கொண்டதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கொரியன் ஏர் விமான நிறுவன உரிமையாளரின் மகள், சியோல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
கொரியன் ஏர் நிறுவன உரிமையாளரின் மகளும், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான சோ ஹூனா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள கென்னடி விமான நிலையத்திலிருந்து தங்கள் நிறுவன விமானத்தில் புறப்பட்டார்.
அந்த விமானம் ஓடுபாதைக்கு வந்தபோது, “மேகடேமியா’ என்ற கடலை உணவை விமானப் பணிப்பெண் அவருக்கு அளித்தார்.
அந்தக் கடலையை தட்டில் வைத்துத் தராமல், அப்படியே பொட்டலமாக அளித்ததால் கோபம் தலைக்கேறிய சோ ஹூனா, அந்தப் பணிப்பெண்ணை உடனடியாக வேலையே விட்டு நீக்கினார்.
மேலும், அந்தப் பணிப்பெண்ணை உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றுவதற்காக, விமானத்தை மீண்டும் பயணிகள் ஏறும் பகுதிக்கு ஓட்டிச் செல்லுமாறு விமானிக்கு உத்தரவிட்டார்.
இதனால் 250 பயணிகள் இருந்த அந்த விமானம் புறப்பட 20 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது.
சாதாரண கடலைக்காக சோ ஹூனா இவ்வளவு பெரிய களேபரத்தில் ஈடுபட்டதை ஆங்கில ஊடகங்கள் “நட் ரேஜ்’ (கடலைக் கோபம்) எனப் பெயரிட்டு செய்திகள் வெளியிட்டன.
பெரும் தொழிலதிபர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் தென் கொரியாவில் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து கொரியன் ஏர் நிறுவன துணைத் தலைவர் பதவியிலிருந்து சோ ஹூனா விலகினார்.
விமானத்தின் பாதையை மாற்றியது, விமானியின் கடமையில் குறுக்கிட்டது, விமானப் பணிப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது உள்ளிட்ட செயல்கள் மூலம் விமானப் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக சோ ஹூனாவுக்கு சியோல் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இந்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
விமானத்தின் செயல்பாட்டில் குறுக்கிட்டது, விமானப் பணியாளர்களிடம் வன்முறையாக நடந்து கொண்டது ஆகிய சோ ஹூனா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படுகின்றன.
எனினும், விமானத்தின் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில், விமானத்தின் பாதையை மாற்றிய குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.
விமானத்தின் பாதுகாப்புக்கு அவர் மிகக் குறைந்த அச்சுறுத்தலையே ஏற்படுத்தினார்.
எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை 10 மாதங்களாகக் குறைக்கப்பட்டு, அந்தத் தண்டனையும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, சோ ஹூனா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
0