அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனின், 296 மின்னஞ்சல்களை, அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது, அதிபர் ஒபாமா அரசு.
அமெரிக்காவில், 2016 நவம்பரில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அதிபர் வேட்பாளராக நிற்க திட்டமிட்டுள்ள, அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அதுதொடர்பான ஆதரவு திரட்டும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வெளியுறவு அமைச்சராக இருந்த போது, ஹிலாரி கிளின்டன் பரிமாறிய, 296 மின்னஞ்சல்களை, அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்களின் முக்கிய சாராம்சங்களில், எந்த மாற்றமும் செய்யப்படாமல், அப்படியே வெளியிடப்பட்டுள்ளன.
இந்த மின்னஞ்சல்கள் எல்லாம், 2012ல், பெங்காசி மற்றும் லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின், பரிமாறப்பட்டவை. இந்தத் தாக்குதல்களில், ஒரு தூதர் உட்பட, 4 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில், அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த மின்னஞ்சல்கள் வெளியிடப்படுவது, அதிபர் வேட்பாளராக களமிறங்க முற்பட்டுள்ள, ஹிலாரிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என, சில தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ‘இந்த மின்னஞ்சல்களை வெளியிடுவதில், மற்றவர்களை விட, தனக்குத் தான், அதிக மகிழ்ச்சி’ என, ஹிலாரி கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சராக ஹிலாரி பதவி வகித்த போது, தன் சொந்த மின்னஞ்சல் கணக்கிலிருந்து, 30 ஆயிரம் மின்னஞ்சல்களை அனுப்பி உள்ளார். அவற்றில், முக்கியமானவை தான், இந்த, 296 மின்னஞ்சல்கள்.