அரசு சாரா அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் ரஷியாவில் நடைமுறைக்கு வந்தது.
ரஷிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தப் புதிய சட்டப்படி, அந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள், அரசியல் சட்ட அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளைத் தடை செய்ய இந்தச் சட்டம் வகை செய்கிறது.
அது போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டைச் சேர்ந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டு, அவற்றின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். அந்த அமைப்புகளின் ஊழியர்கள் மீதும், அவர்களுக்கு உதவுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் சட்டம் இடமளிக்கிறது.
அரசு சாரா அமைப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டவர் ரஷியாவை விட்டு வெளியேற்றப்படுவார். அவர் மீண்டும் ரஷியா திரும்ப இயலாது.
கிழக்கு உக்ரைன் விவகாரத்தைத் தொடர்ந்து, ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதையடுத்து, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக ரஷியாவில் செயல்பட்டு வரும் அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவு இன்றி, அதிகாரிகளே இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வேண்டாத அமைப்புகளுக்கு எதிராக இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனக் கூறி, பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா கவலை: “ஏற்கத் தகாத’ அரசு சாரா அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் கடுமையான சட்டம் ரஷியாவில் நிறைவேறியிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று அமெரிக்கா கருத்து தெரிவித்தது.
16