இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மகிஷினி கலோன் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் யார் என்பதை அரசு முடிவு செய்துவிட்டது. உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்த பிறகு அவரது பெயர் அறிவிக்கப்படும். அதுவரை, இந்தியாவுக்கான தூதர் தொடர்ந்து பணியாற்றுவார்.
அவரைத் தவிர, தூதரகத் தலைமைப் பொறுப்புகளில் கடந்த ஜனவரி 8ஆம் தேதிக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட, அயலகப் பணி சாராத அனைத்து அதிகாரிகளும் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கைக்கு 63 நாடுகளில் தூதரங்கள் செயல்பட்டு வருகின்றன. தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் நடவடிக்கையால், 40 தூதரகங்களில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்று மகிஷினி கலோன் தெரிவித்தார்.
கடந்த ராஜபட்ச ஆட்சியில், தூதரகப் பணிகளில் அரசியல் ரீதியிலான நியமனங்கள் அதிகரித்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த முடிவை இலங்கை வெளியுறவுத் துறை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய மைத்ரிபாலா சிறீசேனா ஆட்சியில், இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை.
7