கடந்த காலங்களில் இலங்கையில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள், காணாமல் போன பத்திரிகையாளர்கள் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும் என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்குகளில் இதற்கு முன்பு விசாரணை நடைபெற்றபோதிலும், குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை.
குறிப்பாக, 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுக்காக பிரசாரம் மேற்கொண்ட பிரகீத் ஏக்னாலிகோடா என்ற கார்ட்டூனிஸ்ட் திடீரென காணாமல் போனார். அவரது நிலை இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், பிரகீத் காணாமல் போனதன் நினைவாக கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறீசேனா பேசியதாவது:
கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட, காணாமல் போன பத்திரிகையாளர்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மறுவிசாரணை நடத்த புதிய அரசு விரும்புகிறது.
பத்திரிகையாளர்கள் எதிர்கொண்ட கடினமான தருணங்களை நாம் நினைவுகூர வேண்டும் என்றார் அவர்.
இலங்கையில் ராஜபட்ச தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது.
குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பினரோடு நடைபெற்ற இறுதிப் போரின்போது, பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இலங்கை முன்னிலை வகித்தது.
பத்திரிகைச் சுதந்திரம் குறித்து 180 நாடுகளைக் கணக்கில் கொண்டு அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேசப் பட்டியலில் இலங்கை 165-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.