தென் சீனக் கடல் பகுதியிலுள்ள தீவுகளில் நிலத்தை சீர்படுத்தும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தது.
தங்களது இறையாண்மைக்கு உள்பட்டு செயல்பட்டு வருவதாகவும் சீனா தெரிவித்தது.
இதுகுறித்து சிங்கப்பூரில், சீனா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள் பங்கேற்று வரும் வருடாந்திர மாநாட்டில் சீனாவின் கடற்படைத் துணைத் தலைவர் சன் ஜியாங்கோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தென் சீனக் கடல் பகுதிகளின் நிலைமை அமைதியாகவும், நிலையாகவும் உள்ளது. அந்தப் பகுதிகளில் கடல் வழிப் பயணத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை.
தென் சீனக் கடல் பகுதியிலுள்ள தீவுகளை மேம்படுத்தவே அங்கு சீர்படுத்தும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
இது தவிர, பேரழிவின்போது பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கடல் சம்பந்தமான அறிவியல் ஆராய்ச்சிகள், வானிலை ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் பகுதியில் பாதுகாப்பு, மீன் உற்பத்தி ஆகியவற்றை சர்வதேச கடமைகளாகக் கருதி சீனா செயல்பட்டு வருகிறது. கடல் சம்பந்தமாக அண்டை நாடுகளுடன் பிரச்னை ஏற்படும்போது, கடல் பகுதிகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு சீனா செயல்படும் என்று சன் ஜியாங்கோ தெரிவித்தார்.
2