சமூக வலைதளமான பேஸ்புக்கில் ’லைக்’ வாங்கும் மோகத்தினால் பலர் ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு உயிரிழப்பதும், சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அமெரிக்காவின் பரபரப்பான சிகாகோ விமான நிலையத்தில் வழக்கம் போல், விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏறத் தொடங்க, அந்த விமானத்தின் பணிப்பெண்களில் ஒருவரான எரிக்கா(41), விமானத்தின் எஞ்ஜினுக்குள் திடீரென ஏறி நின்றுகொண்டு விதவிதமாக ‘போஸ்’ கொடுக்க தொடங்கினார்.
என்ஜினுக்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின், புகைப்படம் எடுத்து முடித்த எரிக்கா அதை பேஸ்புக்கில் பதிவேற்றியபடி விமானத்தில் வந்து அமர்ந்தார். பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது.
எரிக்காவின் இந்த செய்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிர்வாகத்திடம் பயணிகள் முறையிட்டனர். இதையடுத்து எரிக்கா தன்னுடைய புகைப்படங்களை பேஸ்புக்கிலிருந்து நீக்கினார். இது குறித்து பேசிய விமான பணிப்பெண் ஒருவர், ”இது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கம் தான்”(!!!) என்று கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், எரிக்காவின் வினோத நடவடிக்கையினால் அதிருப்தியடைந்த விமான நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.