சீனாவில், யாங்ட்ஸே ஆற்றில் கடந்த 1-ந் தேதி 456 பேருடன் சென்ற ‘ஈஸ்டர்ன் ஸ்டார்’ என்ற பயணிகள் கப்பல், சூறாவளியில் சிக்கி கவிழ்ந்தது. சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் ஆகியோரின் உத்தரவின் பேரில், மிகப்பெரிய அளவில், மீட்பு பணிகள் நடந்தன.
இந்த கோர விபத்தில் 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மீதி அத்தனை பேரும் பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்பட்டது. அதன்படியே இந்த கப்பல் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று மதிய நிலவரப்படி 431 ஆக உயர்ந்தது. இன்னும் 11 பேர் நிலை மட்டும் தெரியவில்லை.
இதற்கிடையே கடந்த 70 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான கப்பல் விபத்து என்று கருதப்படக்கூடிய இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சம்பவம் நடந்த இடத்தில் நேற்று காலை 9 மணிக்கு நினைவஞ்சலி நடத்தப்பட்டது.
சீன போக்குவரத்து மந்திரி யாங் சுவான்டாங் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், இறந்தவர்களின் உறவினர்கள் 1,400 பேர் கலந்து கொண்டனர். பலியானவர்களுக்காக அனைவரும் 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். சீனாவில் ஒருவர் இறந்து விட்டால், 7-வது நாள் நினைவஞ்சலி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.