நேபாளத்தில், அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில், 9,000க்கும் அதிகமானோரை இழந்த அந்நாடு, மீண்டும் கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேபாளத்தின் சோகம் இன்னும் முடிந்தபாடில்லை.மலைப்பாங்கான, டேப்பிள்ஜங் மாவட்டத்தில், இடைவிடாது பெய்த மழையால், நேற்று முன்தினம், திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஆறு கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின.
”நள்ளிரவில், கிராம மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது,” என, கலெக்டர் பொறுப்பு வகிக்கும் சுரேந்திர பட்டாராய் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த, 30 பேரின் உடல்களை கண்டெடுத்தனர்.
படுகாயம் அடைந்த, 10 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; 12 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனால், படுகாயம் அடைந்தோரை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுரேந்திர பட்டாராய் மேலும் கூறினார். நிலச்சரிவில், 12க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கியுள்ளதால், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.