செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தோனி – ஜடேஜா இணைப்பாட்டம் வீண் | சென்னையை விழ்த்தியது ராஜஸ்தான்

தோனி – ஜடேஜா இணைப்பாட்டம் வீண் | சென்னையை விழ்த்தியது ராஜஸ்தான்

2 minutes read

(நெவில் அன்தனி)

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் 3 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

அப் போட்டியின்   மத்திய ஓவர்களில்  சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் றோயல்ஸ் பந்துவீச்சாளர்கள்  கட்டுப்படுத்தியதன் மூலம் அதன் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

10 ஆவது ஓவரிலிருந்து 16ஆவது ஓவர் வரை 41 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் 3 விக்கெட்களையும் இழந்ததால் அதன் வெற்றி தடுக்கப்பட்டது.

கடைசிக் கட்டத்தில் அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனியும் ரவிந்த்ர ஜடேஜாவும் சென்னையின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை.

ராஜஸ்தான் றோயல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்ளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 190 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களைப் பெற்ற அணிகளில் முதலாவது அணியாக ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றி இலக்கை தக்க வைத்துக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் ருத்துராஜ் கய்க்வாட் (8) ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் டெவன் கொன்வே, அஜின்கியா ரஹானே ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர். ரஹானே 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் மேலும் 4 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

ஷிவம் டுபே (8), மொயீன் அலி (7), அம்பாட்டி ராயுடு (1), டெவன் கொன்வே (50) ஆகிய நால்வர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தவர்களாவர். (113 – 6 விக்.)

இந் நிலையில் 16ஆவது ஓவரில் ஜோடி சேர்ந்த ரவீந்த்ர ஜடேஜாவும் அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனியும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 24 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தபோதிலும் அவர்கள் 4 ஓட்டங்களால் வெற்றி இலக்கைத் தவறவிட்டனர்.

தோனி 32 ஓட்டங்களுடனும் ஜடேஜா 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (10) குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் ஜொஸ் பட்லரும் தேவ்தத் படிக்கலும் 2ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுவூட்டினர். மொத்த எண்ணிக்கை 88 ஓட்டங்களாக இருந்தபோது படிக்கல் (38), அணித் தலைவர் சஞ்சு செம்சன் (0) ஆகிய இருவரும் களம் விட்டகன்றனர்.

தொடர்ந்து ஜொஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் 30 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஜொஸ் பட்லர் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

துருவ் ஜுரெல் (4), ஜேசன் ஹோல்டர் (0), அடம் ஸம்ப்பா (1) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷார் தேஷ்பாண்டே 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆகாஷ் சிங் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரவிச்சந்திரன் அஷ்வின்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.