ஜப்பானில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 20-இலிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்மூலம், அந்த நாட்டில் பதின்ம வயதைச் சேர்ந்தவர்களும் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு முதல் முறையாக ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் அரசியலில் பழைய தலைமுறையினரின் ஆதிக்கமே மோலோங்கியுள்ள நிலையில், 18, 19 வயதுடைய 24 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணையவிருப்பது அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பை கணிசமாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஜப்பானின் 12.7 கோடி மக்கள் தொகையில் கால்வாசி பேர் 65 வயதைக் கடந்தவர்கள்.
கடந்த பல ஆண்டுகளாக அங்கு பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாலும், வெளிநாடுகளிலிருந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்பதாலும் 65-வயதைக் கடந்தவர்களின் விகிதம் இன்னும் சில ஆண்டுகளில் 40 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், அரசியல் விவகாரங்களில் இளைய தலைமுறையினரை அதிக அளவில் பங்கேற்கச் செய்யும் வகையில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
0