பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்த இளவரசர் ஹாரி ஜூன் மாதம் 19ம் தேதியுடன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்த பின்பு, கடந்த 10 ஆண்டுகளில் சவால் மிக்க பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது. ஆப்கானிஸ்தானில் இரு முறை சண்டையிடச் சென்றேன்.
எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவங்களை அப்போது பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் கேப்டன் ஹாரி வேல்ஸ் என்று அறியப்படும் இளவரசர் ஹாரி (30), 2005-ஆம் ஆண்டில் அதிகாரிப் பயிற்சி வீரராகச் சேர்ந்தார். 2006-ஆம் ஆண்டு ராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 2007-ஆம் ஆண்டு முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினருடன் சேர்ந்து பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டார்.
ராணுவத்தின் விமானப் பிரிவில் சேருவதற்காக 2009-இல் பயிற்சி மேற்கொண்டார். 2012-ஆம் ஆண்டில் போர்க்கள ஹெலிகாப்டர் விமானியாகச் செயல்படத் தொடங்கினார். அதே ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.
கடைசியாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் ராணுவத்தினருடன் இணைந்து நான்கு வாரங்கள் பணியாற்றினார். பிறகு ஜூன் 19ம் தேதி ராணுவத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
அடுத்து 3 மாதங்கள் அவர் போஸ்த்வானா, நமீபியா, தென்னாப்ரிக்கா, தான்சானியா நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் காப்பாளர் பணியாற்றா உள்ளார்.