இந்தியாவின் பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி கின்னஸ் சாதனையாளராக திகழும் பிரபல பிண்ணினிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது இன்று வழங்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பனின் பெருமையையும், புகழையும் விளக்கும் பல பாடல்களை பாடி மதச்சார்பின்மை மற்றும் சர்வதேச சகோதரத்துவத்தை வலியுறுத்தி சேவை செய்தமைக்காக இவ்விருது வழங்ப்பட்டுள்ளது. சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னிதான வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு இந்த விருதை கேரள மாநில அறநிலையத்துறை மந்திரி சிவக்குமார் வழங்கி, வாழ்த்தினார்.
இந்த விருதுக்கு நன்றி தெரிவித்து பேசிய எஸ்.பி. பாலசுப்ரமணியம், ’ஒரு பாடகராக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ விருதுகளை பெற்றுள்ளேன். அவை அனைத்திலும் இந்த ஹரிவராசனம் விருதை மிகவும் சிறந்த விருதாக கருதுகிறேன். மத நல்லிணத்துக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக சுவாமி ஐயப்பன் ஆலயம் விளங்குகின்றது. ஐயப்பனின் புகழை இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நான் பக்திப் பாடல்களாக பாடியுள்ளேன். எனினும், ஐயப்பனின் இந்த சன்னிதானத்துக்குள் நுழைவது இதுவே முதல்முறை’ என்று கூறினார்.