சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் நேற்று யோகா பயிற்சி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், சிட்னியின் போன்டி கடற்கரை, கான்பெர்ரா உள்ளிட்ட நகரங்களில் எம்.பி.க்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அந்நாட்டு பிரதமர் டோனி அபோட், யோகா கொண்டாட்டத்தை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில், புகழ் பெற்ற லண்டன் தேம்ஸ் நதிக்கரை உள்ளிட்ட இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்றது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து தெரிவித்தார்.
சீனாவில், புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்றது. சிங்கப்பூரில் சுமார் 50 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்தனர். தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 7 ஆயிரத்து 400 பேர் யோகா செய்தனர். பாரீசில், ஈபில் கோபுரத்தின் அடியில் யோகா பயிற்சி நடைபெற்றது. வியட்நாம், ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் யோகா பயிற்சி நடைபெற்றது.