அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், அமெரிக்கவாழ் இந்தியரான பாபி ஜிண்டால் (44) போட்டியிடுகிறார்.
லூசியானா மாகாணத்தின் ஆளுநரான இவர், இந்தத் தகவலை வலைதளம், சுட்டுரை ஆகியவற்றில் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவை, நியூ ஆர்லியான்ஸில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பாபி ஜிண்டால் முறைப்படி அறிவிக்கவுள்ளார்.
அமெரிக்க ஆளுநராகப் பதவியேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பாபி ஜிண்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறவுள்ளார்.
மேலும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர்கள் சங்கத்தில் துணைத் தலைவராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.
இரண்டு முறை லூசியானா ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாபி ஜிண்டால், இதற்கு முன்பு, அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இரு முறை தேர்வு செய்யப்படார்.
முன்னதாக, வானொலி நிகழ்ச்சியொன்றில் பாபி ஜிண்டால், செவ்வாய்க்கிழமை பேசுகையில், “மதம், நாடு, இனம், பாலினம் ஆகியவற்றின் மூலம் நம்மைப் பிரிப்பதற்கு அதிபர் ஒபாமா முயன்று வருகிறார்; இதுபோன்ற பிரிவினைவாத சக்தியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.
1