ஒரே நாளில் மூன்று கண்டங்களை சேர்ந்த மூன்று வேவ்வெறு நாடுகளில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்களை நடத்தி உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.
சம்பவம் 1: பிரான்ஸ் நாட்டின் லியான் நகர் அருகே செயின்ட்-குவென்டின்-பல்லேவியரில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றிய நபர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இது தவிர மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் 2: துனிசியாவின் தலைநகரான துனிஸ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சவ்ஸி கடற்கரைப் பகுதி உள்நாட்டினர் மற்றும் ஐரோப்பிய நாட்டினர் தேடிவந்து தங்கி இளைப்பாறும் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இங்குள்ள இம்ப்ரியல் மர்ஹபா ஓட்டல் பகுதியில் திடீரென புகுந்த ஒரு தீவிரவாதி அங்கு கூடியிருந்த மக்களின் மீது இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். இதில் துனிசியா, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து நாட்டை சேர்ந்த 37 பேர் பலியாகினர். 36 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவம் 3: குவைத் நகரின் மையப்பகுதியில் உள்ள ஷியா மசூதிக்குள் இன்று புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய ஆவேச தாக்குதலுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மூன்று தாக்குதல்களையும் ஒரே அமைப்புதான் நடத்தியது என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் ஐ.எஸ். அமைப்புதான் இதை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ரமலான் மாதத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்துங்கள் என தனது ஆதரவாளர்களுக்கு ஐ.எஸ். அமைப்பு அழைப்புவிடுத்திருந்த நிலையில் மேற்குறிய தாக்குதல்கள் நடத்தப்படுள்ளன. இதன் மூலம் அந்த அமைப்பிற்கான ஆதரவு வேகமாக பரவி வருவது உறுதியாகியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளை மட்டும் அல்லாமல் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.