செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் | கிரீஸ் பிரதமர்ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் | கிரீஸ் பிரதமர்

ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் | கிரீஸ் பிரதமர்ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் | கிரீஸ் பிரதமர்

2 minutes read

சர்வதேச நிதி நிறுவனங்களின் கடனைத் திருப்பி அளிப்பது தொடர்பான நிபந்தனைகள் குறித்து, கிரீஸ் நாட்டு மக்களின் கருத்தை அறிய, ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் கூறினார்.
அதேசமயத்தில், பொதுவாக்கெடுப்பில் அரசுக்குச் சாதகமான முடிவு இல்லையென்றால், கிரீஸின் இடதுசாரி அரசு பதவி விலகக் கூடும் என மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வளர்ச்சி பெற்ற நாடாக உள்ள போதிலும், பொருளாதாரச் சரிவில் உள்ள கிரீஸ், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் 240 பில்லியன் யூரோ (சுமார் ரூ. 17 லட்சம் கோடி) மதிப்பிலான கடன் உதவியைப் பெற்றுள்ளது.
இதில் பன்னாட்டு நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்.) பெற்ற தொகையின் தவணையாக 1.5 பில்லியன் யூரோவை (சுமார் ரூ. 10,500 கோடி) கடந்த செவ்வாய்க்கிழமை திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஆனால் கிரீஸ் அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த நாணயமான யூரோவின் மதிப்பு குறையும் நிலை தோன்றியுள்ளது.
ஜெர்மனி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த அனைத்து நாடுகளின் பொருளாதாரங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், புதிய கடன் பெற கிரீஸின் இடதுசாரி அரசு முயன்று வருகிறது. அவசர காலத் தேவையாகத் தற்போது 30 பில்லியன் யூரோ (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) புதிய கடனாக அளிக்க வேண்டும் என கிரீஸின் இடதுசாரி அரசு கோரியது. அடுத்த தவணைகளை ஒத்திப்போட வேண்டுமெனவும் கோரியுள்ளது.
இந்த நிலையில், அந்த நாடு மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பிற ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. கடன் அளிப்பு தொடர்பான பொது வாக்கெடுப்பில் கிரீஸ் மக்களின் முடிவைத் தெரிந்து கொண்ட பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கலாம் என ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
பல்வேறு சிக்கன நடவடிக்கைகள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டுக்கு கடன் அளித்துள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன.
அந்த நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பிரதமர் ஸிப்ராஸ், பொது வாக்கெடுப்பின்போது நாட்டு மக்கள் தனது நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
பொது வாக்கெடுப்புக்குப் பிறகு, தங்களுக்கு சாதகமான அம்சங்களுடன் மீண்டும் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் கிரீஸ் கலந்து தொள்ளும் என்று அவர் வியாழக்கிழமை கூறினார்.
வங்கிகளிலிருந்து பணம் வெளியேறுவதைத் தடுக்கும் விதமாக, இந்த வாரம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் நாளொன்றுக்கு வாடிக்கையாளர்கள் 60 யூரோவுக்கு (சுமார் ரூ. 4,200) மேல் பெற முடியாது என்கிற கட்டுப்பாடு உள்ளது.
“கடன் சலுகையால் பலன் இல்லை’
வாஷிங்டன், ஜூலை 2: கடன் பெற்றவர் அதனைத் திருப்பி அளிக்க கூடுதல் கால அவகாசம் உள்ளிட்ட சலுகைகள் அளிப்பது போதிய பலனை அளிப்பதில்லை என்று பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்.) கூறியது.
இது தொடர்பாக அந்த சர்வதேச நிதி அமைப்பு வாஷிங்டனில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கடனைத் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிப்பது கூடாது என்பது எங்களது நீண்ட காலக் கொள்கை.
30 ஆண்டுகளுக்கு முன்னர், சில வளரும் நாடுகள் பெற்ற கடனைத் திருப்பி அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கால அவகாசம் அந்நாடுகளின் பொருளாதாரப் பிரச்னைகளைக் களையப் பயன்படுத்தப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், கடனைத் திருப்பித் தர கூடுதல் அவகாசம் தேவை என கிரீஸ் முன்வைத்துள்ள கோரிக்கையை பன்னாட்டு நிதி செயற்குழு விரைவில் பரிசீலிக்கும் என நிதிய வட்டாரங்கள் தெரிவித்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.