மியான்மரில் ரோஹின்கயா முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்க அந்த நாட்டு அரசை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
வியாழக்கிழமையே நிறைவேற்றப்படுவதாக இருந்த இந்தத் தீர்மானம், மியான்மர் பிரதிநிதிகள் யாரும் கூட்டத்துக்கு வராததால் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மியான்மரின் ராகைன் மாகாணத்தில் சிறுபான்மை ரோஹின்கயா முஸ்லிம்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு முழு குடியுரிமையும், சம உரிமையும் வழங்குவதோடு, அதற்கான நடைமுறைகளை வெளிப்படைத் தன்மையுடன் மியான்மர் அரசு மேற்கொள்ள வேண்டும்.
1982-ஆம் ஆண்டில் மியான்மர் இயற்றிய குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா புறக்கணிப்பு: வாக்கெடுப்பு இல்லாமலேயே ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
இதுகுறித்து ஜெனீவாவிலுள்ள ஐ.நா. பிரிவுக்கான இந்தியப் பிரதிநிதி அஜீத் குமார் கூறியதாவது:
இன மோதலை மையப்படுத்தியும், உண்மை நிலவரத்துக்கு அப்பாற்பட்டும் இந்தத் தீர்மானம் உருவாக்கப்பட்டிருப்பது இந்தியாவைக் கவலையடையச் செய்துள்ளது.
ராகைன் மாகாணத்தைப் பொருத்தவரை, அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மியான்மர் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் அவர்.
2