மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் மீது எழுப்பப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
“1 மலேசிய டெவலப்மன்ட் பெர்ஹாத்’ (1எம்.டி.பி.) என்னும் பொருளாதாரத் திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனம் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமானது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 70 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 4,410 கோடி) மதிப்பிலான தொகை, பிரதமர் நஜீப் ரஸாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும் என்று மலேசிய அட்டர்னி ஜெனரல் அப்துல் கனி படேல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: ஊழல் தடுப்பு ஆணையம், மலேசிய ரிசர்வ் வங்கி, காவல் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம்பெறுவார்கள்.
ஏற்கெனவே பிரதமர் அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இது தொடர்பாக சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அங்கிருந்து எடுத்த ஏராளமான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அவற்றின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் ஆழமான, முழுமையான விசாரணை நடைபெறும். அனைத்துத் தரப்பினரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த நிலையில், அவரவர் கருத்துகளை வெளியிட்டு, யாரும் மக்களைக் குழப்பக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அகமது ஹமீதி தெரிவித்தாவது: இணையதளத் தகவல்களை ஊடுருவி, அதன் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு மிரட்டல், பணப் பறிப்பில் ஈடுபட்டு வரும் நபர் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயக அமைப்புகளையும் அழிக்க நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அகமது ஹமீதி தெரிவித்தார்.
பிரதமர் மறுப்பு: ஊழல் குற்றச்சாட்டை பிரதமர் ரஸாக் மறுத்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தப் புகார்களுக்கு எந்தவிதமான அடிப்படையும் ஆதாரமும் கிடையாது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்தப் புகார் கூறப்பட்டுள்ளன.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்கு திட்டமிட்ட சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
0