ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் அடுத்த தலைமுறைக்கான ஹைபர்சோனிக் போர் விமானத்தை மேம்படுத்தும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
உலகின் வலிமைமிக்க ராணுவ கட்டமைப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. தமது ராணுவ வலிமைக்கு மகுடம் சூட்டும் வகையிலும், தமது வலிமையை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் புதிய போர் விமானம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் வேவ்ரைடர் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன் முதற்படிக்கட்டாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைபர்சோனிக் ஆளில்லா விமானத்தின் மாதிரி உருவாக்கப்பட்டு சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 6 நிமிடங்கள் விண்ணில் பறக்கவிடப்பட்ட விமானம், பின்னர் தானாகேவே பசிபிக் பெருங்கடலில் விழவைக்கப்பட்டது. பரிசோதனையின் போது மாதிரி விமானத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு ஹைபர்சோனிக் விமானம் அமெரிக்க படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ராணுவ பலத்துக்கு போட்டியாக இந்த அதிவேக போர்விமானத்தை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என்று கருதப்படுகிறது.