தமிழ் பட உலகை புரட்டி போட்ட மூன்று ஜாம்பவான்கள் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா. துவக்க கால தமிழ் படங்கள் சரித்திர, புராதன கதைகளில் கட்டுண்டு கிடந்தன. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, ரஞ்சன், கே.ஆர்.ராமசாமி அப்படங்களில் கோலோச்சினர். அதில் இருந்து ஸ்ரீதர் மீட்டெடுத்தார். நடப்பு வாழக்கையை திரையில் காட்சிப்படுத்தினார்.
கதாபாத்திரங்களையும் அன்னியப்படுத்தாமல் மக்களோடு வாழ்பவைகளாக கொண்டு வந்தார். அவருக்கு பிறகு தமிழ் பட உலகில் புதுமை, புரட்சி கருத்துக்களை புகுத்தி அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர் நெஞ்சங்களில் சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர் பாலசந்தர். இவர் காலம் தமிழ் படஉலகின் பொற்காலமாக அமைந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், நாகேஷ், சிரஞ்சீவி, நாசர், ரமேஷ் அரவிந்த், பிரகாஷ்ராஜ், சவுகார்ஜானகி, ஸ்ரீகாந்த், விவேக், சுஜாதா, ஜெயபிரதா, ஜெயசுதா, சரிதா, ரேணுகா என பல வித்தகர்களை உருவாக்கிய சிற்பியாகவும் திகழ்ந்தார். கதையோட்டத்தில் அதுவரை இருந்த வரைமுறை கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தார். மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளில் சாயம் பூசாமல் அப்படியே திரையில் கொண்டு வந்தார். இதனால் எதிர்ப்புகளுக்கு ஆளானார். விலைமாது வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த அரங்கேற்றம் படம் சர்ச்சையை கிளப்பியது. கல்வீச்சுக்கும் ஆட்பட்டது.
ரஜினியை அறிமுகப்படுத்திய அபூர்வராகங்கள் படத்தின் கதை இந்திய பட உலகையே திரும்பி பார்க்க வைத்தது. மகள் வயதான ஒருவனையும், அந்த வயதானவனின் மகன் அவளுடைய தாயையும் காதலிப்பது போன்ற பலத்த முடிச்சு போட்டு கச்சிதமாய் கிளைமாக்சில் அவிழ்த்து கைதட்டல் வாங்கினார்.
காமெடி நடிகர் நாகேசை கதாநாயகனாக வைத்து நீர்க்குமிழி படத்தை எடுத்தார். 1965–ல் இப்படம் வந்து வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் இடம் பெற்ற ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், இரு கோடுகள், பூவா தலையா, எதிரொலி, சொல்லத்தான் நினைக்கிறேன் படங்களும் முத்திரை பதித்தன.
1974–ல் வந்த அவள் ஒரு தொடர்கதை படம் தமிழ் பட வரலாற்றில் இன்னொரு மைல் கல்லாக அமைந்தது. கமல், சுஜாதா, விஜயகுமார், ஸ்ரீப்ரியா நடித்து இருந்தனர். மணிரதனம், கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற ஜாம்பவான்கள் எங்களுக்கு பிடித்த நல்ல படங்களில் இதுவும் ஒன்று என சொல்லும் அளவுக்கு சிறந்த படமாக அமைந்தது. 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. ஐந்து இந்திய மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் வரும் கடவுள் அமைத்து வைத்த மேடை, தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு பாடல்கள் இப்போதும் வீடுகள் தோறும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஜெமினி கணேசனை வைத்து எடுத்த நான் அவனில்லை கமலின் மன்மத லீலை, வறுமையின் நிறம் சிவப்பு, ரஜினி வில்லனாக கலக்கிய மூன்று முடிச்சு, தண்ணீர் தண்ணீர் படங்கள் தமிழ் பட உலகின் பொக்கிஷங்கள். தெலுங்கில் எடுத்த மரோசரித்திரா காதலர்களின் தேசிய படமாக கொண்டாடப்பட்டது.
கமலஹாசன், சரிதா நடித்து இருந்தனர். இந்தியில் ஏக் துஜே கேலியே என இதை ரீமேக் செய்தார். அங்கும் பட்டையை கிளப்பியது. இந்தி படத்தில் ரதி கதாநாயகியாக நடித்தார். சென்னையில் மட்டுமே மரோசரித்திரா 600 நாட்கள் ஓடியது. கல்யாண அகதிகள், சிந்து பைரவி, புன்னகை மன்னன், புதுபுது அர்த்தங்கள், வானமே எல்லை, கல்கி என ஒவ்வொரு படமும் பாலசந்தர் திறமையை பறைசாற்றி நிற்கின்றன. நிறைய படங்களுக்கு கதை, வசனமும் எழுதி உள்ளார்.
எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுத அழைத்தனர். தயங்கினார். தமிழ்பட உலகில் எம்.ஜி.ஆருக்கு தனி மரியாதை இருக்கிறது. அவ்வளவு பெரிய நடிகருக்கு என்னால் வசனம் எழுத முடியுமா என்று தன்னடக்கத்தோடு தயங்கினார். நண்பர்கள் வற்புறுத்தலால் எழுதினார். அந்த படம் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரிடமும் பாராட்டு பெற்றார். ஒரு நல்ல காட்சி உருவாக பல பிரசவ வலிகளை அனுபவிப்பார் என்று நடிகர் சிவக்குமார் புகழ்ந்தார். காலத்தை வென்று நிற்கும் காவிய தலைவன் பாலச்சந்தர். வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா எதிர்நீச்சல்…!