பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு எதிராக புதிய கூட்டணியை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அமைத்தார்.
இலங்கையில் வருகிற ஆகஸ்டு 17–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே (69) இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அதற்கு அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு பிரதமர் ரனில் விக்ரம சிங்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்சே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட சிறினோவிடம் படுதோல்வி அடைந்தார். தற்போது ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல கோடி ஊழல் மோசடி புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவரை மீண்டும் மறு அரசியல் பிரவேசம் செய்யும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்தது ஏன் என அதிபர் சிறிசேனாவுக்கு விக்ரமசிங்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் ராஜபக்சேவுக்கு எதிராக புதிய கூட்டணியை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அமைத்துள்ளார். தற்போது அதிபர் சிறிசேனா தலைமையிலான ஆளும் கூட்டணியில் இருந்து இவரது ஐக்கிய தேசிய கட்சியும், பாரம்பரிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் விலகியுள்ளன.
இந்த புதிய கூட்டணி பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் இயங்கும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பெருமளவில் நிறுத்தப்படுகிறார்கள்.