மறைந்த எம்.எஸ்.விஸ்வாதனின் உடலுக்கு பல்வேறு சினிமா துறையினரும், அரசியல் பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சரியாக 12 மணியளவில் சாந்தோமில் உள்ள எம்.எஸ்.வி. வீட்டுக்கு நேரில் வந்தார். எம்.எஸ்.வி.யின் உடலுக்கு மாலை அணிவித்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் ஒரு அற்புதமான மனிதர். கள்ளம், கபடம், பொய், பொறாமை, சுயநலம் இல்லாமல் துறவி போல் வாழ்ந்தவர்,. இந்த மாதிரியான ஒரு மனிதர் சினிமாவில் எந்த துறையிலும் நான் பார்த்ததில்லை.
மதிப்புக்குரிய எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் மிகப்பெரிய வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் எம்.எஸ்.வி., அவர் இல்லையென்றால், கண்ணதாசனோ, வாலியோ, ஸ்ரீதரோ, பாலச்சந்தரோ இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது. அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று பேசினார்.
அவருக்கு முன்னதாக கவிப்பேரரசு வைரமுத்துவும் எம்.எஸ்.வி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், இசையமைப்பாளர்கள் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், நடிகர் பிரபு, டி.ராஜேந்தர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.