புருண்டியில் விரைவில் பொது தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பேச்சு வார்த்தையை புறக்கணித்துள்ளது புருண்டி அரசு.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 3–வது தடவையாக அவர் போட்டியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா, தான்சானியா நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சென்ற போது அங்கு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.
இப்புரட்சியை அதிபர் பியார்ரேவுக்கு எதிராக செயல்படும் தளபதி கோட் பிராய்டு நியோம்பர் நடத்தினார். ஆனால் அரசு விசுவாச ராணுவ படைகள் புரட்சியை முறியடித்து விட்டது. இதனை அடுத்து திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் அதிபர் தேர்தல் ஜூலை 21-ம் தேதி(நாளை) நடைபெறவுள்ள நிலையில் கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் ஏற்பாடு செய்திருந்த பேச்சு வார்த்தையை புறக்கணித்துள்ளது புருண்டி அரசு. இதனை அடுத்து பேச்சு வார்த்தை தேர்தலுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அங்கு உள்ள சிக்கலை மேலும் அதிகரிக்க கூடும் எனக் கூறப்படுகிறது.
ஆனால் பொது மக்களும் மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதுவரை வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளார்கள் 1.4 லட்சம் மக்கள் பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக சென்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.