பொருளாதாரச் சிக்கலில் உழன்று வரும் கிரீஸில், 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த வங்கிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின.
சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து கடனுதவி பெறுவதற்காக ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளின் அடிப்படையில், அந்த நாட்டில் புதிய வரி விதிப்பும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
வங்கிகள் திறக்கப்பட்டபோதிலும், வெளிநாட்டு வங்கிகளுக்குப் பெரும் தொகைகளை மாற்ற வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. புதிய கணக்குகள் தொடங்குவதற்கான தடை நீடிக்கிறது.
வங்கிகள் மூடப்பட்ட நாள்களில், ஏடிஎம் வழியாக, வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 60 யூரோ (சுமார் ரூ. 4,000) பெறலாம் என்ற கட்டுப்பாடு தற்போது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும், நாளொன்றுக்கு அதிகபட்சமாக 300 யூரோ பணம் எடுக்கலாம்.
இரு தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கிரீஸýக்கு இடைக்கால கடனுதவியாக 7.16 பில்லியன் யூரோ (சுமார் ரூ. 50,000 கோடி) அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஐரோப்பிய மத்திய வங்கிக்குத் திருப்பி அளிக்க வேண்டிய கடன் தொகையில் 4.2 பில்லியன் யூரோவை கிரீஸ் இன்னும் ஓரிரு நாள்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னாட்டு நிதியத்துக்குத் திருப்பியளிக்க வேண்டிய கடன் தொகையில் ஒரு பகுதியையும் ஓரிரு நாள்களில் கிரீஸ் அளிக்கும் எனத் தெரிகிறது.
புதிய வரி விகிதம் அமல்: கடந்த வாரம் கிரீஸýக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி, புதிய, கூடுதல் வரி விதிப்பு திங்கள்கிழமை நடைமுறைக்கு வந்தது.
சர்க்கரை, கோகோ உள்ளிட்ட பல பொருள்களுக்கு இதுவரை இருந்த 13 சதவீத வரி விதிப்பு, உடனடியாக 23 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
அதே சமயத்தில், மருந்து, புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவற்றுக்கு இதுவரை இருந்த 6.5 சதவீத வரி, 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்கல் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும். புதிய சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நடக்கவுள்ளது.
இடைக்கால கடனுதவி பெறுவதற்கான நாடாளுமன்ற விவாதத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, பிரதமர் ஸிப்ராஸ் கட்சியைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், அடுத்த கட்ட பொருளாதார சீர்திருத்தங்களை தற்போதுள்ள அரசு முறையாகச் செயல்படுத்துமா என்பது சந்தேகம்தான் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
எனவே, கிரீஸில் தற்போது ஆட்சி புரியும் தீவிர இடதுசாரி அரசு பதவி விலகி, அந்த நாட்டில் விரைவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் 240 பில்லியன் யூரோ (சுமார் ரூ. 17 லட்சம் கோடி) மதிப்பிலான கடன் உதவியை கிரீஸ் பெற்றுள்ளது. இதில் பன்னாட்டு நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்.) பெற்ற தொகையின் தவணையாக 1.5 பில்லியன் யூரோவை (சுமார் ரூ. 10,500 கோடி) கடந்த ஜூன் 30-ஆம் தேதி திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஆனால் கிரீஸ் அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், அவசர காலத் தேவையாக 30 பில்லியன் யூரோ (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) புதிய கடனாக அளிக்க வேண்டும் என கிரீஸின் இடதுசாரி அரசு கோரியது. கிரீஸின் கோரிக்கைகளை ஏற்க வேண்டுமானால், அந்த நாடு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதி அமைப்புகள் கூறின. கிரீஸில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த தீவிர இடதுசாரியினர், சர்வதேச நிதியுதவி அமைப்புகளின் நிபந்தனைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.
1