2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

தர்மபுரம் வைத்தியசாலைக்கு அண்மையில் செல் விழுந்து வெடித்த வண்ணம் இருந்தது. அதே சமயம் இராணுவ முன் நகர்வு தர்மபுரம் பகுதியை நோக்கி அமைந்தது. இதன் காரணமாக மக்கள் கையில் கிடைத்தவற்றையும் தம்மால் கொண்டு செல்லக் கூடியவற்றையும் எடுத்துக்கொண்டு துன்பச் சுமைகளுடன் இன்னும் சில கிலோமீற்றர் அப்பால் இருந்த உடையார்கட்டு சுகந்திரபுரம் பகுதிகளில் ஆங்காங்கே வசிப்பிடங்களை ஏற்படுத்தி கொண்டனர்.
இராணுவ முன் நகர்வு காரணமாக தர்மபுரம் வைத்தியசாலை மூடிய அதே வேளை, மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த அம் மாவட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் கண்டாவளை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தனர். தற்காலிக சத்திர சிகிச்சை வசதிகளுடன் Dr. வெற்றிநாதன் வைத்தியராக கடமையாற்றினர். தர்மபுரம் நோக்கிய படையெடுப்பின் காரணமாக கண்டாவளை வைத்தியசாலையில் இருந்த சில மருந்து பொருட்களுடனும் சில வைத்தியசாலை தளபாடங்களுடனும் புளியம்போக்கனை வழியாக ஒருவாறு பிரமந்தனாறு பாடசாலையில் பொருட்களை இறக்கி வைத்தனர். அதேவேளை பரந்தன் கிளிநொச்சி பகுதிகள் விடுபட பளை ஆனையிறவு பகுதி இராணுவ கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் வடமராட்சி கிழக்கு ,மருதங்கேணி, ஆழியவளை கட்டுப்பட்டு பகுதியில் இருந்த மக்கள் பிரமந்தனாறு பகுதியை வந்தடைந்தனர். எனவே பிரமந்தனாறு பாடசாலைக்கு அருகாமையில் இயங்கிய திலீபன் மருத்துவ மனையோடு Dr .வெற்றிநாதன் அவர்களும் அவரின் கீழ் கடமை புரிந்த சுகாதார ஊழியர்களும் கடமையை தொடர்ந்தனர்.
தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்த சில மருந்து பொருட்களை கல்லாறு ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திக்கும் . கிளி/ கண்ணகியம்மன் அ. த. க பாடசாலை வைத்தியசாலைக்கும் எடுத்து வரப்பட்டன. கண்டாவளை மற்றும் தர்மபுரம் வைத்தியசாலைகளில் நுற்றுக்கணக்கான நோயாளிகள் கட்டில்கள் விடுபட்டு போயின பின் நாளில் நோயாளிகளை பாய்களிலும் வெற்று தரைகளிலும் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தர்மபுரம் புளியம்போக்கனை பகுதிகளில் பெருமளவு நெல் மூடைகளையும், எரி பொருட்களையும் பொறுப்பாக இருந்தவர்கள் அவ் இடத்திலேயே விட்டு வெளியேறினார்கள்கள். அடுத்த நாள் இவ் விடயம் பல ஊடகங்களில் வெளி வந்ததை கேள்விப்பட்டேன்.

அதேசமயம் இடம்பெயர்ந்த இடங்களில் தர்மபுரம், கண்டாவளை புளியம்போக்கனை பகுதிகள் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தன. தர்மபுரம் விசுவமடு பகுதியை பிரிக்கும் ஆற்றின் ஒரு புறம் இராணுவத்தினரும் மறுபுறம் புலிகளும் நிலைகொண்டிருக்கின்றனர் என மக்கள் பேசிக்கொண்டனர்.
அதேசமயம் விசுவமடு பிரதேசத்தில் இருந்தும் மக்கள் வெளியேறி சென்ற வண்ணம் இருந்தனர். விசுவமடு பாடசாலை வைத்தியசாலையில் இருந்த குறிப்பிட்ட அளவு மருந்து பொருட்கள் மற்றும் தளபாடங்களை ஏற்றி உடையார்கட்டு பாடசாலை பகுதியை நோக்கி நகர்த்தினோம்.
பதட்டத்துடன் பல உயர் அதிகாரிகள் புதுக்குடியிருப்பு ஒட்டிசுட்டான் பகுதிக்கு அண்மையில் அமைந்திருந்த இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வெளியேறி வவுனியாவை சென்றடைன்தனர்.
தர்மபுரம் பகுதி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த போது அங்கு
இயங்கிய கிளிநொச்சி அரச அதிபர் பனிமனை முற்றாக செயலிழந்தது. இது தவிர இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியனவும் தமது சேவைகளை நிறுத்திக்கொண்டன. இரு வங்கி முகாமையாளர்களும் இராணுவ கட்டுப்பட்டு பகுதிக்குள் சென்றடைந்தனர்.

அப்போது சர்வதேச செஞ்சுலுவை சங்கத்தின் (ICRC) உதவியோடு பொது மக்களுக்கான உணவு தொடரணி தர்மபுரம் பகுதிக்கு வருகை தந்தது. தர்மபுரத்தை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்னதாக உணவு வினியோகத்தை அரச அதிபர்களுடாக செய்திருந்தனர். அத் தொடரணி உத்தியோகத்தராக வருகை தந்த தற்போதைய கெளரவ பாரளமன்ற உறுப்பினர் திரு. சிறிதரன் அவர்கள் கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக இருந்தமையால் கிளிநொச்சி மகாவித்தியாலய ஆசிரியர்களை அழைத்து கலந்துரையாடி பாடசாலை பொறுப்பை ஆசிரியர் திரு அ. பங்கயற்செல்வன் அவர்களிடம்’ ஒப்படைத்து விட்டு தொடரனியுடன் வெளியேறினார்.
தர்மபுரம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் விசுவமடு சந்தி செல்விச்சில் இலக்காகியது. அப்பகுதிகளில் இருந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த பொருட்களுடனும் தங்களால் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களுடனும் வெளியேறினர். கல்லாறு மற்றும் புன்னைநீராவி ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்தியசாலை இயங்கியதால் எமது உத்தியோகத்தர்களில் ஒரு சிலர் விசுவமடு சந்திக்கு அப்பால் போக்குவரத்தை மேற்கொண்டனர்.

உணவுக்கான தட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்து சென்றது. விசுவமடு பகுதியில் இருந்த ப.நோ.கூ சங்கங்களில் இருந்த கோதுமை மா களஞ்சியம் பொதுமக்களால் உடைக்கப்பட்டது. பலர் துவிச்சக்கரவண்டியிலும், தலையிலுமாக மா மூடைகளை எடுத்துச்சென்றனர். வைத்திய சாலை நோயாளிகளுக்கும் அங்கு கடமை புரிவர்களுக்கும் உணவு வழங்க வேண்டி இருந்ததால் இவ்வாறு கொண்டு வரப்பட்ட மா மூடைகள் சிலவற்றை ரூபாய் 2௦௦௦ படி வாங்கினோம். எமக்கு விற்பனை செய்தவர் மீண்டும் விசுவமடு பகுதியில் மாவை எடுத்துவர சென்று காணக்கூடியதாக இருந்தது.
அப்போது இப் பகுதிகளில் இயங்கிய வைத்தியசாலைகளை பார்வையிட்டு பிரதானமாக இயங்கிய உடையார்கட்டு வைத்தியசாலைக்கு மாலையில் சென்றடைந்ததேன்.


தொடரும்….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-32/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-33/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-34/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-35/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-36/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-37/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-38/