சீனாவின் முக்கியப் பங்குச் சந்தையான ஷாங்ஹாய் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது.
சீனத் தொழிலக உற்பத்தி குறித்த புள்ளிவிவரம் திங்கள்கிழமை வெளியானது. கடந்த 15 மாத அளவிலேயே மிகக் குறைந்த தொழிலக உற்பத்தி வளர்ச்சி இருந்ததாகப் புள்ளிவிவரத்தில் தெரிய வந்தது.
இந்த வளர்ச்சி விகிதம் முதலீட்டாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.
வர்த்தக முடிவில் ஷாங்ஹாய் ஒருங்கிணைந்த குறியீட்டில் 345 புள்ளிகள் சரிந்தது. இது 8.4 சதவீத இழப்பாகும். முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 201 லட்சம் கோடி இழந்தனர் எனத் தெரிகிறது. அரசு நிறுவனங்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கு விலை 10 சதவீத அளவு வீழ்ச்சியைக் கண்டன.
பொருளாதார அளவில் உலகின் இரண்டாம் இடத்தில் சீனா உள்ள நிலையில், அந்த நாட்டில் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி உலகின் பல்வேறு பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.