பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை, குறிப்பாக குழந்தைகளை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து தீவிரவாத வழக்குகளில் விரைவான விசாரணை நடத்துவதற்கு ராணுவ கோர்ட்டுகளை அமைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. இதற்காக அந்த நாட்டின் அரசியல் சட்டத்தில் 21-வது திருத்தம் செய்யப்பட்டது. மேலும் பாகிஸ்தானில் 1952-ம் ஆண்டு இயற்றப்பட்ட ராணுவ சட்டமும் திருத்தப்பட்டது.
ஆனால் ராணுவ கோர்ட்டுகளை அமைக்க வகை செய்த அரசியல் சட்டத்தின் 21-வது திருத்தத்துக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் 15 வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ராணுவ கோர்ட்டுகளின் செயல்பாட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இதேபோன்று ராணுவ கோர்ட்டு 6 பேருக்கு மரண தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்புக்கும் இடைக்கால தடை வழங்கியது.
இந்த நிலையில் ராணுவ கோர்ட்டுகளுக்கு எதிரான வழக்குகளை தலைமை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 17 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 26-ந் தேதி முடிந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தீவிரவாத வழக்குகளை துரிதமாக விசாரிக்க ஏதுவாக ராணுவ கோர்ட்டுகள் அமைப்பதற்கு பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் 21-வது திருத்தம் செய்தது செல்லும் என தலைமை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்பில் 11 நீதிபதிகள் ராணுவ கோர்ட்டுகளுக்கு ஆதரவாகவும், 6 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு அளித்தனர். மெஜாரிட்டி தீர்ப்பு, ராணுவ கோர்ட்டுக்கு ஆதரவாக அமைந்து விட்டது. இதன் மூலம் ராணுவ கோர்ட்டுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீங்கி விட்டது.
இந்த தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறப்பு உதவியாளர் (சட்டம்) ஆஷ்டர் ஆசப் அலி கருத்து தெரிவிக்கையில், “இது தீவிரவாதத்துக்கு எதிராக விழுந்த மற்றொரு அடி ஆகும். இது நாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றி” என கூறினார். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் காம்ரான் முர்டஸா, “சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம்” என கூறினார்.