“ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்தத் தடையை மேலும் நீட்டித்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட், வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது.
குறிப்பாக, ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கு, இந்தியாவை சமாதானப்படுத்தி ஆதரவு தரவைக்க வேண்டும் என அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அதிபர் ஒபாமா அனுப்பி வைத்தார்.
அதன்படி, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது. இதனால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், உலகின் 99 சதவீத நாடுகளின் ஆதரவுடன் ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அண்மையில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதனால், இந்தியா போன்ற நாடுகள் நீண்ட காலம் பாதிக்கப்பட வேண்டியதில்லை. ஈரான் மீதான தடையை படிப்படியாக நீக்கிக் கொள்வதால், இந்தியாவுக்கு அந்த நாடு கச்சா எண்ணெயை விற்க முடியும் என்று என்று ஜோஷ் எர்னஸ்ட் கூறினார்.
“மோடியின் பயணம் குறித்து தெரியாது’: இதனிடையே, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வரும் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகைக்கு வருவது குறித்துத் தனக்குத் தெரியாது என்று ஜோஷ் எர்னஸ்ட் கூறினார்.
நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, 5 நாள் பயணமாக மோடி அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, ஒபாமா – மோடி இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ஜோஷ் எர்னஸ்ட் மேற்கண்டவாறு பதிலளித்தார்.