புற்றுநோய் பாதிப்பை பற்றிய புரிதல் தற்காலத்தில் நிறைய பேருக்கு இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவிசெய்யும் நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. எனினும், சில மோசடி நபர்களின் செயல்பாட்டால், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவும் எண்ணம் பலருக்கு காணாமலே போய்விடுகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தற்போது அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிராண்டன் லீ வீவர்-கேட்ஸ் பொய்யாக தனக்கு புற்றுநோய் வந்ததாக நடித்து உறவினர்களையும், நண்பர்களையும் ஏமாற்றியது பற்றிய ரகசிய தகவல் அப்பகுதி போலீசாருக்கு சமீபத்தில் கிடைத்தது.
இதனையடுத்து, பிராண்டன் லீ புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்த மருத்துவமனையில் அப்பகுதி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர் அங்கே சிகிச்சை செய்துகொண்டதற்கான எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை.
கடந்த 2013-ம் ஆண்டு தனக்கு புற்றுநோய் வந்ததாக பேஸ்புக் முதற்கொண்டு செய்தித்தாள் வரை தெரியப்படுத்தி சிகிச்சைக்கெனக் கூறி பதினான்காயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஒன்பது லட்சம்) வரை பிராண்டன் லீ நன்கொடையாக பெற்றுள்ளார்.
பிராண்டன் லீ அனைவரையும் ஏமாற்றும் பொருட்டு புற்றுநோயாளி போல் தனது தலையை மொட்டை அடித்துக்கொண்டு நாடகமாடியுள்ளார். மொட்டையுடன் உள்ள படங்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார்.
இவரது இந்த மோசடி தற்போது அம்பலமானதும் அவருக்கு பரிதாபம் பார்த்து, உதவி செய்த நண்பர்களில் பலர் மனமுடைந்து போயுள்ளனர். ‘அவளது உடல்நிலை தேறுவதற்காக வெகுவாக பிரார்த்தித்தோம். கண்ணீர் மல்க அவள் குணமடைய கடவுளிடம் மன்றாடினோம்’ என அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பணமோசடி வழக்கில் பிராண்டன் லீ-யை தற்போது கைது செய்துள்ள போலீசார் அவரை பென்சில்வேனியா சிறையில் அடைத்துள்ளனர்.