மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் பரவியுள்ள எபோலா நோய், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒழிக்கப்பட்டு விடும் என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கைத் தெரிவித்தது.
எபோலா நோய் தொடர்பாக, ஐ.நா.வில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கருத்தரங்கில் பேசுகையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கரெட் சான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பேசியதன் விவரம்:
எபோலா நோடை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போதுள்ள நோய் கண்டுபிடிப்பு, கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்பட்டு வரும் தீவிரம் தொடருமானால், இந்த ஆண்டு முடிவுக்குள் அந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா, எபோலா நோயால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டது. கடந்த மே மாத இறுதியில் அங்கு அந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தோம்.
எனினும் கடந்த ஜூலை மாதம், அங்கு மீண்டும் 6 பேருக்கு நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
நோய் எதிர்ப்பில் நேரிட்ட குறைபாட்டைக் களைய கடும் முயற்சி எடுத்து வருகிறோம்.
அடுத்ததாக, கினீ நாட்டிலும் சியரா லியோன் நாட்டிலும் 3 பேர் நோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிய வந்தது.
எபோலா நோய்க்கு எதிரான போர் நிறைவடைந்ததாகக் கூறிவிட முடியாது. ஒவ்வொரு வாரமும் ஓரிருவருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிய வருகிறது.
நோய் பாதிப்பு முற்றி, சிலர் உயிரிழந்து, அவர்களது உடல்களை உள்ளூர் மக்கள் ரகசியமாகப் புதைத்துவிடுவதாகத் தெரிய வந்துள்ளது.
நோய் பாதிப்பிலிருந்து குணமானவர்களுக்கு மூட்டு வலி போன்ற உபாதைகள் நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று மார்கரெட் சான் கூறினார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினீயில் இந்த நோய் 2013-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. பின்னர் அண்டை நாடுகளான சியரா லியோன், லைபீரியாவுக்கும் பரவியது. எபோலா நோய் தாக்கி, இதுவரை சுமார் 11,300 பேர் உயிரிழந்தனர் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2